ஓர் பாலினத்தவர் திருமணத்திற்கு பச்சைக்கொடி காட்டியது அவுஸ்திரேலியா..!!!

ஆஸ்திரேலியாவில் ஓர் பாலினத்தவர் திருமண சட்ட மசோதா பாராளுமன்றத்தின் கீழ் சபையில் ஏற்கனவே நிறைவேறி விட்டது. இந்த ஓர் பாலினத்தவர்கள் திருமணத்துக்கு அங்கீகாரம் அளிக்க வகை செய்யும் சட்டமசோதா மீதான இறுதி வாதம் பாராளுமன்றத்தில் பிரதிநிதிகள் சபையில் நடந்து வந்தது.

 

இந்நிலையில், ஆஸ்திரேலியா பாராளுமன்றத்தில் ஓர் பாலினத்தவர் திருமணத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது என பாராளுமன்ற அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 150 உறுப்பினர்களில் ஐந்து பேர் மட்டுமே இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து, ஓர் பாலினத்தவர் திருமணம் செய்வதற்கு இனி தடையேதும் இல்லை. இந்த சட்ட மசோதாவால், அடுத்த ஆண்டு பிப்ரவரி முதல் ஓர் பாலினத்தவர் திருமணம் நடைபெற உள்ளது. இந்த மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கிய இந்த நாள் மிகவும் சிறந்த நாள் என பிரதமர் டர்ன்புல் கூறியுள்ளார்.

 

ஏற்கனவே பாராளுமன்ற எம்.பி. மற்றும் விளையாட்டு வீராங்கனை உள்பட பலர் ஒரே பாலினத்தவர் திருமணத்துக்காக தங்களது ஜோடியை தேர்வு செய்து காத்திருக்கின்றனர். ஒரே பாலினத்தவர் திருமணத்துக்கு ஒப்புதல் அளித்துள்ள நாடுகளில் ஆஸ்திரேலியா 26-வது நாடாக அங்கம் வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.