ஊர் சுற்றுவதற்காக வாகனங்களை திருடிய வாலிபர்!

காதலியுடன் ஜாலியாக ஊர்சுற்றவே இருசக்கர வாகனங்களை திருடி விற்றதாக கார்த்திக் வாக்குமூலம் அளித்துள்ளார்.

கன்னியாகுமரியின் ஆரல்வாய்மொழி, பூதப்பாண்டி, வடசேரி உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இரு சக்கர வாகனங்கள் திருடு போவதாக தொடர் புகார்கள் எழுந்து வந்தன.

இதனையடுத்து குற்றவாளியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது, திருடு நடக்கும் பகுதிகளில் ரோந்து பணியிலும் பொலிசார் ஈடுபட்டனர்.

அப்போது சம்பவ தினத்தன்று வடசேரி பகுதியில் பொலிசார் நின்றிருந்த போது, சந்தேகப்படும் வகையில் இளைஞர் ஒருவர் நின்றுள்ளார்.

இவரை பிடித்து விசாரணை நடத்தியதில், நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூரை சேர்ந்த கார்த்திக் என்பது தெரியவந்தது.

மேலும் நாகர்கோவில் மற்றும் பூதப்பாண்டி பகுதியில் இருசக்கர வாகனங்களை திருடியவர் என்பதும் தெரியவந்தது.

இந்நிலையில் பொலிசிடம் அளித்த வாக்குமூலத்தில், என் காதலி நாகர்கோவிலில் உள்ள கல்லூரியில் படிக்கிறார், அவரை பார்க்க வரும் போது பேருந்து நிலையத்தில் உள்ள வாகனங்களை நோட்டமிடுவேன்.

யாரும் கவனிக்காத நேரத்தில் திருடி விற்று, அதில் வரும் பணத்தை காதலிக்காக செலவழிப்பேன்.

அவருடன் ஜாலியாக ஊர்சுற்றவே இவ்வாறு செய்தேன், இதேபோன்று வடசேரி பகுதியில் இருந்த போது தான் பொலிசிடம் மாட்டிக் கொண்டேன் என தெரிவித்துள்ளார்.

கார்த்திக் திருடிய 21 வாகனங்களையும் பறிமுதல் செய்த பொலிசார், சிறையில் அடைத்தனர்.