உலக வரைபடத்தை உருவாக்க போராடிய பணியாளன் -கட்டாயம் மாணவர்கள் அறிந்திருக்கவேண்டியவை

டல் பயணத்தின் மூலம் உலகை முதன் முதலில் சுற்றிவந்த பெருமை பெர்டினான்ட் மெக்கல்லன் என்பவரையேச் சேரும். போர்ச்சுக்கீசிய மாலுமியான இவர், ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர். இவர் தனது 12 வயதில், இரண்டாம் ஜோன் மன்னனின் பட்டத்து ராணிக்கு, எடுபிடி வேலையாளாக அரண்மனைக்குள் நுழைந்தார். இவருடைய அண்ணன் டியோகோவும் ராணியான லியோனாராவிடம் வேலை செய்து கொண்டிருந்தார். மெக்கல்லன் எதையும் ஆர்வத்துடன், சுறுசுறுப்பாகச் செய்வதைக் கண்டு ஜோன் மன்னருக்கு மிகவும் பிடித்துப்போனது. ஆகவே மெக்கல்லனுக்கு இசை, நடனம், வேட்டையாடுதல், குதிரையேற்றம், வாள் பயிற்சி, குதிரைச்சண்டை, வான  வியல், வரைபடம் தயாரித்தல் என பல வி‌ஷயங் களைக் கற்றுக் கொடுத்தார்.

 

 

மெக்கல்லன் கல்வி கற்றுக் கொண்டிருக்கும்போது கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடித்தது பற்றி தெரிந்து கொண்டார். இது அவருக்கு கடல் பயணத்தின் மீதும், புதிய நாடுகளைக் கண்டுபிடிக்க வேண்டும் என்பதிலும் ஆர்வத்தை ஏற்படுத்தியது. அதேபோல் வாஸ்கோடகாமாவின் கடல் பயணமும் இவருக்கு ஆர்வத்தைத் தூண்டியது.

 

 

1505–ம் ஆண்டில் மெக்கல்லன் தனது முதல் கடல் பயணத்தை மேற்கொண்டார். 22 கப்பல்களில் கீழைத் தேசம் நோக்கிய பயணத்தில் ஈடுபட்டார். அப்போது அவருக்கு வயது 25. கப்பலின் தளபதியாக மெக்கல்லன் திகழ்ந்தார். இந்தப் பயணத்தின்போது, மலாக்கா பழங்குடிகளான மூர்ஸ் இன மக்களுடன் போரிட்டார். இந்தச் சண்டையின்போது இவரது இடது காலில் படுகாயம் ஏற்பட்டது. ஸ்பைஸ் தீவுகளுக்குச் செல்லும் கடல் வழியை மெக்கல்லன் கண்டுபிடித்தார். இருப்பினும் அப்போதைய மன்னர் முதலாம் மானுவேல் மெக்கல்லனைக் கவுரவிக்காமல் அவமானப்படுத்தினார். இதனால் மனமுடைந்து ஸ்பானியாவிலிருந்து போல்டோர்க்குச் சென்றார். அங்கு வானவியல் அறிஞர் டைடிபிலேரியா, கப்பலோட் ஜான், அரசவை அதிகாரியான பார்போசா ஆகியோரைச் சந்தித்தார். இவர்கள் ஸ்பெயின் நாட்டிற்குச் செல்லும்படி ஆலோசனை கூறினார்கள்.

 

 

மெக்கல்லனிடம் ஸ்பைஸ் தீவுக்குச் செல்லும் புதிய வழி இருப்பதை, ஸ்பெயின் மன்னர் தெரிந்து கொண்டார். ஆகவே மெக்கல்லனைத் தனது நாட்டிற்கு வரும்படி அழைத்தார். மன்னர் மானுவேலைப் பழிவாங்கும் நோக்கில், அக்டோபர் 1517–ல் போர்ச்சுக்கலை விட்டு வெளியேறினார் மெக்கல்லன்.

 

 

உலகைச் சுற்றி வரும் தனது கப்பல் பயணத் திட்டத்தை ஸ்பெயின் அரசரிடம் மெக்கல்லன் கூற, பயணத்திற்கான கப்பல்கள் மற்றும் பொருள் உதவியைச் செய்ய மன்னர் சார்லஸ் முன் வந்தார். அதற்காக 2 ஆண்டிற்கு தேவையான உணவு, போரிடுவதற்கு ஆயுதம், உலகை சுற்றி வர 5 கப்பல்கள், மாலுமிகள் என அனைத்தையும் ஏற்பாடு செய்து கொடுத்தார். போர்ச்சுக்கல், ஸ்பெயின், இத்தாலி, ஜெர்மனி, பெல்ஜியம், இங்கிலாந்து, பிரான்ஸ் நாடு களைச் சேர்ந்த 270 மாலுமிகள் இந்தப் பயணத்தில் ஈடுபட்டனர். 1519–ம் ஆண்டு செப்டம்பர் 21 அன்று உலகைச் சுற்றி வரும் கப்பல் பயணம் தொடங்கியது.

 

 

இன்றைய ரியோடி ஜெனிரோவில் முதன் முதலாக நங்கூரமிட்டு, வரைபடத்தை வரைய ஆரம்பித்தார். அங்கிருந்தவர்கள் மெக்கல்லன் படையை கடவுளாக வழிபட்டனர். இத்தீவை விட்டு டிசம்பர் 25 அன்று புறப்பட்டுச் சென்றனர்.

 

 

மெக்கல்லனின் கப்பல்கள் தினமும் சராசரியாக 16 கி.மீ. வேகத்தில் பயணித்தன. 1520–ல் ‘ரியோ டி பிளாட்டா’ என்னும் இடத்தில் நங்கூரம் இட்டனர். மார்ச் 30 அன்று மூன்றாவதாக ‘பாட்டகொனியா’ என்னுமிடத்தை அடைந்தனர். அது இன்றைய தெற்கு அர்ஜென்டினா பகுதியிலுள்ள ‘செயின்ட் ஜுலியன்’ துறைமுகமாகும். இப்படியே மெக்கல்லன் மேற்கு திசையை நோக்கி முன்னேறிக்கொண்டிருந்தார்.

 

 

மெக்கல்லனின் கடல் வழி பயணத்தை சில நாடுகள் ஏற்றுக்கொண்டாலும், பல நாடுகள் எதிர்த்தன. அதை பொருட்படுத்தாமல் தன்னுடைய பயணத்தை தொடர்ந்து, கடல் வழி வரைபடத்தை உருவாக்கிக்கொண்டிருந்தார். இதற்கிடையில் புயல், போர் என மெக்கல்லனின் இரண்டு கப்பல்கள் அழிந்துவிட்டன. மீதமிருந்த மூன்று கப்பல்களும் பசிபிக் பெருங்கடலை நோக்கிச் சென்றுகொண்டிருந்தன. கொந்தளிப்பு இல்லாமல், புயல் இல்லாமல், அலைகள் இல்லாமல் அமைதியாக இருந்தது அந்தக் கடல். ஆகவே அதனை ‘அமைதிக்கடல்’ என பெயரிட்டு, அதையும் கடல் வழி வரைபடத்தில் குறித்துக்கொண்டார்.

 

 

1521–ம் ஆண்டு ஜனவரி 25 அன்று நான்காவதாக ‘செயின்ட் பால்’ தீவுகளில் இறங்கினார். அது இப்போது ‘புகாகா’ என்ற பெயரில் அழைக்கப்படு  கிறது. இது பசிபிக் கடலின் தென்முனையில் உள்ளது. ஐந்தாவதாக ‘மரியானா’ தீவில் கால் பதித்தார். அந்தத் தீவைச் சேர்ந்த சதுமாரா பழங்குடி மக்களிடம் போராடியே அங்கு கால் பதிக்க முடிந்தது. இதில் ஏராளமான மாலுமிகளையும், போர் வீரர்களையும் இழந்தார். இருப்பினும் கடல் பயணம் தொடர்ந்தது.

 

 

பிறகு ஒரு நீண்ட பயணத்திற்குப் பிறகு மார்ச் 16, 1521–ல் பிலிப்பைன்ஸின் ஹோமொன்ஹான் தீவை அடைந்தார். இதன் மூலம் பிலிப்பைன்ஸில் முதன் முதலில் கால் பதித்த ஐரோப்பியர் என்ற பெருமையை மெக்கல்லன் பெற்றார். பிலிப்பைன்ஸை அடையும்போது அவருடன் 150 பேர் மட்டுமே உயிருடன் இருந்தனர். மெக்கல்லனுடன் பிலிப்பைன்ஸ் நாட்டினர் போரிட்டனர்.

 

 

‘மக்டன்’ பகுதியின் தலைவரான லாபுலாவுவிடம், 6 பேருடன் சென்று மெக்கல்லன் போரிட்டார். ஏனெனில் போரில் அதிக பேரை இழந்துவிடக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தார். இதில் வெற்றிக்கிடைத்தாலும், பிலிப்பைன்ஸின் மற்றொரு தீவான செர்பூவுக்குச் சென்று போரிட்டபோது, மெக்கல்லன் கொல்லப்பட்டார். கிட்டத்தட்ட உலகை சுற்றி வரும் கடல் வழி பயணம் முடியும் தருவாயில் மெக்கல்லன் இறந்தது மற்ற தளபதிகளுக்கு வருத்தத்தை அளித்தது.

 

 

அந்த சமயம் ஒரு கப்பலும், ஒரு சிலரும் மட்டுமே உயிருடன் இருந்தனர். இதனால் போர் இன்றி, பயணத்தை முடிவுக்கு கொண்டுவர திட்டமிட்டனர். மிஞ்சியிருந்த விக்டோரியா கப்பலுக்கு, எல்போன்சா என்பவர் தளபதியாக இருந்து வழி  நடத்தினார். மெக்கல்லனின் உயிர் தோழர் இவர். ஒரு வழியாக 1522–ம் ஆண்டு ஆப்பிரிக்கக் கண்டத்தின் தென்முனையிலுள்ள கேப் கு ஹோப்பையும், கேப் வேர்டேவையும் அடைந்தனர். அங்கு சில கடல் வழி பயணக்குறிப்புகளை குறித்துக்கொண்டு தாய்நாடான ஸ்பெயினை நோக்கி புறப்பட்டனர்.  270 பேரில் 18 பேர் மட்டுமே உயிருடன் திரும்பினர்.

 

 

மெக்கல்லன் ஆரம்பித்த கடல் வழி பயணம், பூமி உருண்டை வடிவமானது என்பதை நிரூபித்தது. சூறாவளி, எதிரிகள், புயல் போன்ற இடையூறுகளை 3 ஆண்டுகளாக கடந்து, கடல் வழி வரைபடத்தை உருவாக்கினார்கள். அது ஸ்பெயின் மன்னருக்கு பெருமையை ஏற்படுத்திக் கொடுத்தது. உயிரை பணயம் வைத்தவர்களுக்கு தங்க வெகுமதிகளை கொடுத்து மகிழ்வித்தார். இந்த பயணத்தில் உயிர் இழந்தவர்களுக்கும் மரியாதை செலுத்தப்பட்டது. குறிப்பாக மெக்கல்லனை பெரிதும் மதித்தார். மன்னருக்கு பிறந்த கடைசி மகனுக்கு மெக்கல்லன் என்று பெயரிடப்பட்டது. அன்றிலிருந்து இன்று வரை மெக்கல்லனின் பெருமையை உலகம் பேசிக்கொண்டிருக்கிறது.

 

 

மெக்கல்லன் நினைவாக அவருக்கு சிலி நாட்டில் சிலை வைக்கப்பட்டது. 1800–ம் ஆண்டில் பால்வழி மண்டலத்திற்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்ட நட்சத்திர மண்டலத்திற்கு மெக்கல்லானிய மேகங்கள் எனப் பெயரிட்டனர். நிலாவில் உள்ள இரண்டு கிண்ணக்குழிகள் மற்றும் செவ்வாய்க் கிரகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு கிண்ணக் குழிக்கும் ‘மெகல்கென்ஸ்’ என 1935–ம் ஆண்டில் பெயரிட்டனர். வெள்ளி கிரகத்தை வரைபடம் வரைய அனுப்பப்பட்ட விண்கலத்திற்கும் மெக்கல்லன் எனப் பெயரிட்டிருந்தனர்.