இளநீரின் மகத்துவம் தெரியுமா…??

நாம் பலவித பானங்களைத் தயாரித்துப் பருகுகிறோம். ஆனால் இயற்கை அளித்திருக்கும் இனிய பானமான இளநீர்தான் எல்லாவற்றையும் முந்தி நிற்கிறது. காரணம், இது சுவையானது மட்டுமல்ல, சத்துகளும் நிறைந்தது.

இளநீரில் கலோரி மிகவும் குறைவு. தினமும் ஓர் இளநீரைப் பருகி வந்தால் பல்வேறு நன்மைகளைப் பெறலாம்.

இளநீரில் அமினோ அமிலங்கள், என்சைம்கள், பி காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள், இரும்பு, கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம், மாங்கனீஸ், துத்தநாகம் போன்றவை நிறைந்துள்ளன.

இளநீர் செரிமானத்துக்கு உகந்தது. இது வயிற்றுப்போக்கு, காலரா போன்றவற்றின் தாக்கத்தால் ஏற்படும் உடல் வறட்சியைப் போக்க உதவுகிறது.

 

சருமத்தின் ‘பி.எச்.’ நிலையைச் சமன் செய்து, உடலின் பளபளப்பை அதிகரித்து, தோல் அரிப்பு அல்லது தோல் தொற்றுகளில் இருந்து சருமத்தைப் பாதுகாக்கிறது.

 

வைட்டமின்கள் நிறைந்த இளநீர் நமது மனநிலையை உடனடியாக மாற்றுவதுடன், மனச்சோர்வு, மன அழுத்தத்தைக் குறைக்கிறது. இளநீர், குறைந்த கலோரி பானம் என்பதால், இது உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.

இளநீரில் கால்சியச் சத்து அதிகமாக உள்ளது. அதனால் எலும்புகளை வலிமையாக்கி, ஆரோக்கியமாகப் பாதுகாக்கிறது. இளநீரில் அதிக அளவு பொட்டாசியம் உள்ளது. எனவே இந்த நீரைப் பருகுவது, சிறுநீரகக் கற்களை கரைக்க உதவுகிறது.

உயர் ரத்த அழுத்தப் பிரச்சினை இருப்பவர்கள், இளநீர் பருகி வந்தால், அது ரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைக்கும். ஒற்றைத் தலைவலிப் பிரச்சினையையும் நீக்கும்.

பொட்டாசியம் சத்து நிறைந்த இளநீரைக் குடித்து வந்தால், தசைப் பிடிப்பு பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்கும். இளநீர், நீண்ட, ஆரோக்கியமான கூந்தல் வளர்ச்சிக்கு உதவு வதுடன், நீரிழிவு நோயாளிகளுக்கும் நன்மை பயக்கிறது.