இன்று ஆரம்பமாகும் குளிர்கால ஒலிம்பிக்கில் இணைய உள்ள இரு துருவங்கள்!

தென் கொரியாவின் பியாங்சாங் நகரில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் கோலாகலமான தொடக்க விழாவுடன் இன்று தொடங்குகின்றன.

23-வது குளிர்கால ஒலிம்பிக் தொடரான இதில் 92 நாடுகளை சேர்ந்த சுமார் 3 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.

தென் கொரியாவுடன், தீவிர பகை நாடான வட கொரியாவும் இந்த ஒலிம்பிக்கில் பங்கேற்க உள்ளது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

குளிர்கால ஒலிம்பிக் போட்டியையொட்டி வீரர், வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்கள் தங்குவதற்காக அனைத்து வசதிகளுடன் கூடிய ஒலிம்பிக் கிராமங்கள் பியாங்சாங், கங்நியாங் பகுதிகளில் உருவாக்கப்பட்டுள்ளன.

இங்கு பலத்த பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வடகொரியா தரப்பில் இருந்து 150 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.

சிறப்பம்சமாக மகளிருக்கான ஐஸ் ஹாக்கியில் மட்டும் தென் கொரியா, வட கொரியா வீராங்கனைகள் இணைந்து ஒரே அணியாக கொரியா என்ற பெயரில் களமிறங்க உள்ளனர்.

எனினும் இதர போட்டிகளில் இரு நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் தனித்தனியாகவே கலந்து கொள்கின்றனர். இம்முறை தொடக்க விழாவில் இரு நாடுகளை சேர்ந்த வீரர்களும் ஒரே கொடியின் கீழ் பங்கேற்க உள்ளனர்.

ஊக்க மருந்து விவகாரம் தொடர்பாக ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டிருந்த ரஷ்யாவுக்கு குளிர்கால ஒலிம்பிக்கிலும் தடை நீடிக்கிறது.

எனினும் தனிநபர் பிரிவில் 167 ரஷ்ய வீரர், வீராங்கனைகள் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் ஒலிம்பிக் கொடியின் கீழ் பங்கேற்பார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.