இனி சீன பொருட்களை பயன்படுத்தமாட்டோம் கோயில் நிர்வாகம் அறிவிப்பு

உத்தரப்பிரதேசம் மாநிலம் மதுராவில் பிரசித்தி பெற்ற கிருஷ்ண பகவான் கோயில் உள்ளது. கிருஷ்ணர் இங்கு பிறந்தார் என்பதால், கோயில் அமைத்து வழிபட்டு வருகின்றனர்.

 

இங்கு ஒவ்வொரு ஆண்டும் கிருஷ்ணர் பிறந்த தினம் வெகு சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். கிருஷ்ண ஜென்மாஷ்டமியின் போது கோயிலில் பல்வேறு வண்ண மாலைகள் அணிவித்து, பல வண்ண நிறத்திலான மின் விளக்குகள் அமைத்து சிறப்பான அலங்காரங்கள் செய்யப்படும்.

 

இந்நிலையில், இந்த ஆண்டு நடைபெறவுள்ள கிருஷ்ண ஜென்மாஷ்டமி கொண்டாட்டத்தில் சீன தயாரிப்புகள் இடம்பெறாது
என பிருந்தாவன் கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக கோயில் நிர்வாகத்தினர் கூறுகையில், “இந்த ஆண்டு ஆகஸ்ட் 14-ஆம் தேதி கிருஷ்ண ஜென்மாஷ்டமி கொண்டாடப்பட உள்ளது. இந்த ஆண்டு கொண்டாட்டத்தில் சீன விளக்குகள் மற்றும் சீன தயாரிப்பு அலங்கார பொருள்கள் நிச்சயம் இடம்பெறாது. கோயிலுக்கு வரும் துறவிகள், யாத்ரீகர்கள் மற்றும் உள்ளூர் மக்களும் சீன தயாரிப்புகளை பயன்படுத்தக் கூடாது என வலியுறுத்தி வருகின்றனர். மேலும், மத்திய அரசும் சீன பொருட்களை பயன்படுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும்’’ என தெரிவித்துள்ளனர்.

கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக, இந்திய எல்லையில் தனது படைகளை நிறுத்தியுள்ள சீனாவை கண்டிக்கும் வகையில் பிருந்தாவன் கோயில் நிர்வாகத்தினர் இந்த முடிவை எடுத்துள்ளதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.