அறம் ஒரு சிறப்புப் பார்வை!!!!

நயன்தாரா, ராமச்சந்திரன் துரைராஜ், சுனு லக்‌ஷ்மி, விக்னேஷ், ரமேஷ், அனந்தகிருஷ்ணன், அம்பேத் மற்றும் பலர் நடித்திருக்கும் திரைப்படம் ‘அறம்’. கோபி நயினார் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். ஜிப்ரான் இசையில், ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவில் உருவாகி இன்று வெளியாகியிருக்கிறது ‘அறம்’ திரைப்படம். திருவள்ளூர் மாவட்ட கலெக்டராக நயன்தாரா.

 

மக்களுக்குச் சேவை செய்வதே தன் பணி என இருக்கும் நேர்மையான ஆட்சியர். அரசியல்வாதிகளின் இடையூறுக்கு மத்தியில் தான் மேற்கொண்ட பணியை அறம் வழுவாமல் செய்து முடித்தாரா, அதற்குப் பிறகு என்ன ஆனது என்பதே படத்தின் கதை. பணியிடை நீக்கம் செய்யப்பட்டு விசாரணையில் இருக்கும் நயன்தாரா சொல்லும் விதமாக பின்னோக்கித் தொடங்குகிறது கதை.

உலகளாவிய அளவில் நிலவும் குடிநீர் பஞ்சத்தைச் சுட்டிக்காட்டியவாறு தொடங்குகிறது படம். ‘இப்ப தண்ணி இருக்கிற ஒரே இடம் வாட்டர்கேன் கம்பெனி மட்டும் தான். உலகத்துல யாருக்குமே குடிக்க தண்ணி இல்ல… ஆனா, அவங்களுக்கு மட்டும் எப்படி தண்ணி கிடைக்குது..?’ என இந்தப் படத்தில் எளிமையான நீரரசியல் பேசும் பாமரர்களின் கேள்வி நம் எல்லோருக்கும் எழ வேண்டிய கேள்வி.

 

ஒரு புறம் வளர்ச்சியின் குறியீடாக ராக்கெட் ஏவப்படும் ஶ்ரீஹரிகோட்டா… இன்னொரு புறம் புறக்கணிக்கப்பட்டவர்களின் குறியீடாக அத்தியாவசியத் தேவைகளற்ற ஒரு கிராமம். இவை இரண்டுக்கும் இடையே அதிக தூரமில்லை. ஆனால், இரண்டிற்குமான வித்தியாசங்களின் தொலைவு அந்த ஆகாய அளவு.

குடிக்கும் நீரே உப்பு நீராகிப் போன பகுதியில் சிப்பி அள்ளும் தொழில் செய்யும் மனிதர்கள், விவசாய நிலங்கள் அழிந்து ரியல் எஸ்டேட்களாக மாறியதை உணர்த்தும் வகையில் ரியல் எஸ்டேட் கற்களுக்கு பெயின்ட் அடிக்கும் வேலை செய்யும் ராமச்சந்திரன் துரைராஜ், அவரது மனைவியாக கூலி வேலை செய்யும் சுனு லக்‌ஷ்மி. அவர்களது மகனாக ‘காக்கா முட்டை’ ரமேஷ். சுனு லக்‌ஷ்மியின் தம்பியாக ‘காக்கா முட்டை’ விக்னேஷ் இவர்களைச் சுற்றி வருகிறது நயன்தாராவின் அறம்.

மைக்கேல் பெல்ப்ஸ் கனவுகளுடன் நீரில் மூச்சுப் பிடிக்கும் ரமேஷ், ராமச்சந்திரன் துரைராஜ் போன்ற ஏழைக் கூலித் தொழிலாளியின் வீட்டில் பிறந்தால் அவர்களது கனவுகள் கண்ணீராகத்தான் கசியும் என ஆங்காங்கே சென்டிமென்ட் டச் கொடுத்திருக்கிறார் இயக்குநர்.

 

குடிக்கத் தண்ணீர் இல்லாமல் கூல்ட்ரிங்ஸ் கொடுக்கும் நர்ஸ் வினோதினி, குடிநீர் பஞ்சத்தால் நெடுதூரம் சென்று தண்ணீர் எடுத்துவர வேண்டியிருப்பதால் பள்ளிக்குப் போகாத பெண்கள், வானம் பார்த்த பூமியாகிப் போன சீமைக்கருவேலமும், பொட்டல் காடுகளுமென வறட்சிக்கான அத்தனை குறியீடுகளும் படத்தில் காட்டப்பட்டுள்ளன.

 
குடிநீர் பிரச்னையைப் பேசியபடிச் செல்லும் படம் அதன் தாக்கத்தில் உருவாகும் இன்னொரு பிரச்னைக்குத் திரும்பி வேகம் பிடிக்கிறது. ஒரு சுனு லக்‌ஷ்மி தன் 4 வயது குழந்தையை சீமைக்கருவேல மரங்கள் வெட்டும் வேலைக்கு அழைத்துச் செல்கிறார்.

 

குழந்தை சில நிமிடங்கள் காணாமல் போக, பதட்டத்தோடு அதைத் தேடி அலைகிறார். அந்தக் குழந்தை மூடப்படாத ஆழ்துளைக் கிணற்றில் விழுந்தது கண்டுபிடிக்கப்படுகிறது. அந்தக் கிணற்றின் பாதி வழியில் சிக்கிக்கொண்ட குழந்தையைக் காப்பாற்ற அரசாங்க உதவிகளை நாடுகிறார்கள் மக்கள்.

 

அதற்குள் கிராமத்து இளைஞர்களே செல்போனில் கயிற்றைக் கட்டி உள்ளே விட்டு குழந்தையின் குரலை வைத்து எத்தனை அடி ஆழத்தில் குழந்தை சிக்கியிருக்கிறது என்பதையும் கண்டு பிடிக்கிறார்கள்.