அரசிடமிருந்தும் நாட்டை மீட்க போராடும் மஹிந்த தரப்பு!

நாட்டை அரசாங்கத்திடமிருந்து மீட்க வேண்டும் என கூட்டு எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய பகுதிகளை விடுதலை புலிகளிடமிருந்து மீட்டதை போன்று, பாரிய பொருளாதார அபாயத்தை எதிர்நோக்கியிருக்கும் இந்த நாட்டை அரசாங்கத்திடம் இருந்து மீட்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் நேற்று  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர்,

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் நாட்டின் வளங்கள் பாதுகாக்கப்பட்டு வந்தது. ஆனால் இந்த நல்லாட்சியில் நாட்டின் வளங்கள் வெளிநாடுகளுக்கு விற்கப்பட்டு வருகின்றன.

கொழும்பு, அம்பாந்தோட்டை துறைமுகங்கள் மற்றும் அம்பாந்தோட்டை விமான நிலையம் ஆகியவற்றை சீனாவிற்கும், வடக்கிலுள்ள காங்கேசன்துறை துறைமுகம், பலாலி விமானநிலையம், சம்பூர் அனல் மின்நிலையம் ஆகியவற்றை இந்தியாவிற்கும், திருகோணமலை எரிபொருள் களஞ்சியத்தை அமெரிக்காவிற்கும் விற்க இந்த அரசு திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், இவர்களது ஆட்சி எதிர்வரும் 2020ஆம் ஆண்டுவரை நீடித்தால் நாட்டின் வளங்கள் எதுவும் மிஞ்சாது. அனைத்தும் வெளிநாடுகளுக்கு சொந்தமாகிவிடும்.

எனவே விடுதலைப் புலிகளிடமிருந்து வடக்கு, கிழக்கை மீட்டது போன்று தற்போது இந்த அரசாங்கத்திடமிருந்து நாட்டை மீட்பதும் மிக அவசியமானதொன்றாகக் காணப்படுகிறது.

எனவே இந்த முறைக்கேடான அரசாங்கத்திற்கு எதிராக அனைவரும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.